
துவைத்து காயப் போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளை சைக்கோ நபர் ஒருவர் திருடி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூரை அடுத்துள்ள பகுதிகளில், பெண்கள் துவைத்து காயப்போட்டிருக்கும் அவர்களின் உள்ளாடைகள் மாயமாகி வந்துள்ளது. இதனால், பெரும் தொல்லைக்கு ஆளான பெண்கள், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிந்து பெண்களின் உள்ளாடைகளை தொடர்ந்து திருடியுள்ளது தெரியவந்தது.
மேலும் அந்த சிசிடிவி கேமராவில், எந்த வீட்டில் பெண்களின் செருப்பு மட்டுமே உள்ளதோ அந்த வீட்டின் கதவை தட்டுவது, ஜன்னல்களை திறந்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸூக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தை போல், கடந்தாண்டு சென்னை கிழக்கு தாம்பரம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளில் சைக்கோ நபர் ஒருவர், பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்த சம்பவத்தில் தமிழ் பிரபு என்ற நபரை போலீசார் கைது செய்திருந்தனர். சிறையில் இருந்து வெளிவந்த பின்பு, மீண்டும் அந்த செயலில் தமிழ் பிரபு ஈடுபடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்க, தமிழ் பிரபு செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். அதில், தமிழ் பிரபு தான் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ் பிரபுவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதன்படி, தமிழ் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பகலில் கால் டாக்ஸியில் ஓட்டி வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்களின் வாயை மூடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவருடைய செல்போனை கைப்பற்றிய போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.