கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும் உள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,870 ஆக உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கரோனா தாக்கத்தால் பின்னர் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.