இந்திய மனிதர்களுக்கு ஆதார் எண் கொடுத்தது போன்று ஆந்திராவில் நில முறைகேடுகளை தடுக்க 11 இலக்க பூதார் எண் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை விஜயவாடாவிலுள்ள தலைமை செயலகத்தில் நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டிலேயே முதன் முறையாக நிலங்களை பாதுகாக்கும் பூதார் திட்டம் கொண்டு வருவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஊழல் இல்லாத ஆட்சிய அமைக்க வேண்டும் என்பதையே எனது லட்சியமாக வைத்து செயல்படுகிறேன். ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ள பூதார் எண் மற்றும் பூ சேவா திட்டத்தின் மூலம் நில முறைகேடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். ஒவ்வொருவரின் நிலத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும். ஒவ்வொரு மக்களுக்கும் ஆதார் எண் எப்படி அனைத்து விவரங்களுடன் உள்ளதோ அது போன்று ஒவ்வொருவரின் நிலத்திற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 11 இலக்க எண்ணும் க்யூ ஆர் கோடு எண்ணும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தங்களின் நிலம் பாதுகாப்பாக உள்ளதா அல்லது வேறு யாராவது முறைகேடு செய்து உள்ளார்களா என்பதை ஒரு கிளிக் மூலமாக பூ சேவா இணைய தளத்தில் நிலத்தின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.