நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது.
இந்த போராட்டங்களுக்கு இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமா துறைகளின் பிரபலங்கள் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒருசில பிரபலங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டமும், கலவரமும் அதிகமாக இருக்கும் அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் செய்தியாளர்கள் சந்திப்பில், “அசாம் மக்களின் உரிமைகளை யாரும் திருட முடியாது என்று உறுதியளிக்க விரும்புகிறேன், நமது மொழிக்கும், அடையாளத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், “அசாம் மாநிலத்தின் அந்தஸ்து, மதிப்பு எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. அதை வைத்து மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.