நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். மசோதா திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்களைப் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கமும் அளித்துள்ளது.
இந்தநிலையில் இந்த விவகாரம் நேற்று மக்களவையில் எதிரொலித்தது. நீட் விலக்கு மசோதா திரும்ப அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று திமுக எம்.பிக்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில் இன்று மாநிலங்களவை கூடியதும் திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரினார். அதற்கு சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி மறுக்க, திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.