
காதலித்தால் சொந்த மகளையே தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்த்பூர் மாவட்டம், திலக் நகரைச் சேர்ந்தவர் துபகுலா ராம ஆஞ்சநேயலு. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் நான்காவது மகளான பாரதி (19), ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம், துபகுலாவுக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆஞ்சநேயலு, கடந்த 1ஆம் தேதி தனது மகள் பாரதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, மகளின் உடலை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார். பாரதியின் நடமாட்டம் இல்லாததை கண்டு சந்தேகமடைந்த ஊர் பொது மக்கள், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், ஆஞ்சநேயலுவை போலீஸ் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஆஞ்சநேயலு ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தில் ஆஞ்சநேயலு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.