முதல்வரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒடிசா அரசுக்கு வந்த கடித்ததையடுத்து, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 5 அன்று ஒடிசா மாநில முதல்வருக்கு, பெயரிடப்படாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்வரைக் கொல்ல சதித்திட்டம் நடப்பதாகவும், எனவே அவர் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5 ம் தேதி கிடைத்த அந்த கடிதத்தில், "சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் சில ஒப்பந்தக் கொலையாளிகள் உங்களைக் கொல்ல முயற்சித்து வருகிறார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் தொழில்முறை குற்றவாளிகள் என்பதால், அவர்களிடம் ஏ.கே.47 மற்றும் அரை தானியங்கி ரகத் துப்பாக்கிகள் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், எனவே தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். ஆயுதங்கள் ஏற்கனவே மாநிலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சதித்திட்டத்தைத் தீட்டியவர் நாக்பூரில் வசிக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு வந்த இந்த கடிதம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பாதுகாப்பை அதிகரிக்கவும், இதுதொடர்பாக மாநில காவல்துறை தலைவர், உளவுத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் புவனேஸ்வர் காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை மேற்கொள்ளவும் உள்துறை சிறப்புச் செயலாளர் சந்தோஷ் பாலா உத்தரவிட்டுள்ளார்.