
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள உலகளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நூர்ஜகான். இவரது மூத்த மகள் யாஸ்மினை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வடக்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மதுக்கு அடிமையான அலி குடித்துவிட்டு போதையில் குடும்பத்தினருடன் அடிக்கடி பிரச்சினை செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம்(4.3.2025) இரவு மாமியார், மருமகன் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் மது போதையில் அலி தனது மாமியார் நூர்ஜகான் கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் பார்க்காத நிலையில் வீடு முழுவதும் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுள்ளது. ஆனால், வீட்டில் இருந்தவர்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்து உயிர் தப்பினார்.
இதையடுத்து, இது தொடர்பாக சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் ராயப்பன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மாமியாரின் வீட்டிற்கு தீ வைத்து எரித்த அலியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இரு சக்கர வாகனத்தில் வரும் அலி மாமியார் வீட்டிற்கு தீ வைத்து எரித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.