
தெலுங்கான மாநிலம், ஹைதராபாத் கச்சிகுடா பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (25). கார் டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்கும், 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையில், ஆதர்ஷும் இளம்பெண்ணும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். அதன்படி, கடந்த 3ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் வழக்கம் போல் வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வாழ்க்கையில் மனக்கசப்பு வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆதர்ஷ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த இளம்பெண் நம்ப மறுத்துள்ளார். இதனால், தனது வருங்கால மனைவியை நம்ப வைப்பதற்காக அயர்ன் பாக்ஸ் வயரை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கில் தொங்குவது போல் ஆதர்ஷ் நடிக்க முயன்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று ஆதர்ஷின் கால் வழுக்கியுள்ளது. இதனால், அவர் நிலைகுணிந்து துடிதுடித்துக் கொண்டிருந்தார். இதனை வீடியோ காலில் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக ஆதர்ஷின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து அவர்கள் வருவதற்குள், ஆதர்ஷ் பரிதாபமாக தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், விரைந்து வந்து ஆதர்ஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகள் கண்முன்னே மணமகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.