
கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “தன்னைப் பற்றி வேறொருவர் பெயரில் புத்தகம் எழுதி, அதில் தன்னையே வீரர் என்று குறிப்பிட்டுக் கொண்டவர் தான் சாவர்க்கர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றவர் சாவர்க்கர். மகாத்மா காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்டோர் சிறையில் வாடியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இதுபோன்ற மன்னிப்புக் கடிதம் எழுதியதில்லை” என்று பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு, பா.ஜ.கவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனால், ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில், திட்டமிட்டபடி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகர் ஒருவருடன் சந்திப்பு நடத்துவதால் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்று ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து இந்த விசாரணையை ஏப்ரல் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டது.