ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதே போல் காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட- ஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநில தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி, ஏற்கனவே காஷ்மீர் மாநில தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை அளித்துள்ளதால், சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான ஆணையை மத்திய அரசிதழில் மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
ஏற்கனவே ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையை குவித்தது மத்திய அரசு. மேலும் காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகும், முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது காஷ்மீர் மாநில அரசு. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதற்கிடையே தான் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இருப்பினும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறவில்லை. இந்நிலையில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்கள், தனது ஆதரவாளர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறி வீட்டு காவலில் உள்ள தலைவர்களை அதிரடியாக கைது செய்தது காஷ்மீர் அரசு. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஸ்ரீநகரில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அறிவித்தார். அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு- காஷ்மீர் சென்ற அவரை, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது ராணுவம். இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.