Skip to main content

மணிப்பூர்... இந்தியாவா? பாரத்தா.. காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Congress MP Obsession about India Vs Bharat

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விதமாகச் சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்தியா என வைத்திருந்த டிவிட்டர் முகப்பு படத்தை பாரத் என மாற்றியுள்ளார். பாரதம் என அழைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எம்பி ஹர்னாத் சிங் என்பவர், ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது. எனவே பாரத் என மாற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக ஆளுநர் இன்று ஆசிரியர் தினத்திற்காக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இந்தியா என்ற சொல்லை தவிர்த்து பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகோய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர்,  “2014ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் வரை இந்தியா என்ற வார்த்தையால் பா.ஜ.க.வுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி உருவான பிறகு அவர்கள் மனதில் புதிய வெறுப்பு எழுந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அதானி, சீனா, லடாக், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நாங்கள் இந்தியாவுக்காகவும், பாரதத்திற்காகவும் உழைத்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் பா.ஜ.க.வினர் இந்தியாவா? பாரத்தா? என்று உழைத்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்