உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி மொழி பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “பண்டைய இந்திய நூல்களையும், முன்னோர்களின் இணையற்ற ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.பண்டைய இந்தியாவில் இருந்த முனிவர்கள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். அது இன்னும் உலகிற்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளன. வேதகால முனிவர் பரத்வாஜ் விமானத்தைக் கண்டுபிடித்தார், ஆனால் அதற்கான பெருமை ரைட் சகோதரர்களுக்குச் சென்றது. வேதகால முனிவர் பரத்வாஜ் தான் விமானத்துக்கான ஒரு யோசனையை வழங்கினார். ஆனால் அதன் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டது. இப்போது அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் ராவணனின் சகோதரர் கும்பகர்ணன், ஆறு மாதங்களாக தன் ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் செய்து பல இயந்திரங்களை உருவாக்கினார். பிற நாடுகள் தங்கள் நாடு மீது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தடுக்க ஆறு மாதங்கள் மறைந்திருந்து ரகசியமாக இயந்திரங்களை வடிவமைத்தார். இந்த இயந்திரங்கள் செய்யும் பணியை ஆய்வகத்தில் ரகசியமாக செய்ய வேண்டியிருப்பதால், கும்பகர்ணனை ஆறு மாதங்களுக்கு வெளியே வரக்கூடாது என்று ராவணன் உத்தரவிட்டார். ஆனால், கும்பகர்ணன் ஆறு மாதம் தூங்குவார், பின் ஆறு மாதங்கள் விழித்துக் கொண்டிருப்பார் என்ற தகவல் பரவியுள்ளது. அது உண்மை இல்லை” என்று பேசினார். இவரது பேச்சு தற்போது விவாதபொருளாகி உள்ளது.