அழைப்பிதழில் காவல்துறை அதிகாரிகளின் பெயரை அச்சடித்து போலி மருத்துவமனை திறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள பண்டசேரா பகுதியில், கடந்த 17ஆம் தேதி ‘ஜான்சேவா பன்நோக்கு மருத்துவமனை’ என்ற பெயரில் ஒரு புதிய மருத்துவமனை திறக்கப்படவுள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த அழைப்பிதழில், சூரத் காவல் ஆணையர் உள்பட பல்வேறு மூத்த காவல்துறை அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டதை போல், கடந்த 17ஆம் தேதி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம் விநியோகித்த அழைப்பிதழ் குறித்த தகவல் போலீசாருக்கு சென்றது. மருத்துவமனை திறப்பு விழாவில் காவல்துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்காததால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை திறப்பு விழா குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிந்தது.
மேலும், மருத்துவமனை நிறுவனர்களான 5 பேரில், 3 பேர் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதில் 2 பேர் போலி மருத்துவர்கள் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த மருத்துவமனையை மூடி, இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மருத்துவர்கள் இணைந்து மருத்துவமனை திறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.