புதுச்சேரி கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சார்ந்தவர் லட்சுமணன். கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்டன்டெராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் இதுவரை தெரிந்தவர்களை அழைத்து சென்று பணம் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரியாங்குப்பம், சொர்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பும்போது ஏ.டி.எம் சென்றுள்ளார் . அங்கு பணம் எடுத்து தருமாறு அங்கிருந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். அவர் பின் நம்பரை போட்டுவிட்டு வேலை செய்யவில்லை என்று கூறி ஏ.டி.எம் கார்டை திரும்ப கொடுத்ததால் லட்சுமணன் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் மீண்டும் அரியாங்குப்பம் வந்த அவர் வங்கியில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் திருடிய மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த முருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் முருகன் என்பதும் சென்னையில் உணவகத்தில் பணியாற்றிய அவர் கரோனா நோய் தொற்றுவால் வேலையிழந்ததால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இதேபோன்று ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.