புதுச்சேரியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சாமி பிள்ளை தோட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் குடியிருப்பு அருகே மதுபானக் கடை திறக்கக் கூடாது எனப் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் முதலமைச்சர் ரங்கசாமியை மக்கள் சந்தித்து குடியிருப்பு அருகே மதுபானக் கடையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்ததால் மதுபானக் கடை திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த மதுபானக் கடையைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிய வந்தது. மேலும் கடையைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபானக் கடை திறக்கப்பட உள்ள கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு எதிராகவும், மதுபானக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி மதுபானக் கடை திறந்தால் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.