ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வேணுகொண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பூசாரி பிரசாத் என்பவர் பூஜை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கோவிலும், பூசாரி பிரசாத்தும் பேசு பொருளாக மாறியுள்ளனர்.
கோவில் கருவறையில் உள்ளே அமர்ந்து கால் மேல் கால்போட்டு பூசாரி ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விசாரித்ததில் அந்த கோவில் 700 ஆண்டு பழமையான சிவன் கோவில் என்றும், அந்த மது அருந்தும் பூசாரி பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீடியோவில் கூல் டிரிங்ஸ் பாட்டிலில் மதுவைக் கலந்து குடித்துக்கொண்டே அந்த பிரசாத் யாரிடமோ செல்போனில் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் பவன் கல்யாண், இந்து மதம் குறித்தும், கோவில் குறித்தும், சனாதனம் குறித்து ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் பேசி வந்த நிலையில், அவரது சொந்த மாநிலத்திலேயே சிவன் கோவிலில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.