மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று (20.11.2024) காலை 07.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதே சமயம் மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கும், உத்தரப் பிரதேசத்தின் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குப்பதிவில், மகாராஷ்டிராவின் பாஜக தலைவரும், பாந்த்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஆஷிஷ் ஷெலர், மும்பையில் உள்ள செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். மகாராஷ்டிர துணை முதல்வரும், பாராமதி சட்டமன்றத் தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான அஜித் பவார், பாரமதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவருமான ராம் நாயக் மகாராஷ்டிரா தேர்தலில் வாக்களித்தார்.