அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் 20 சீட்டும், ரூ.100 கோடி பணமும் கேட்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வுக் குழு திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கூட்டணி குறித்த மற்ற விஷயங்களை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்; நீங்கள் கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை மட்டும் வழங்குங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இப்போது கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் ரண வேதனையாக இருக்கிறது. கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் சும்மாவா வருகிறார்கள்.
அப்படி வருகிறவர்கள் ஒரு 20 சீட்டு கொடுங்க, ரூ.50 கோடி கொடுங்க, ரூ.100 கோடி கொடுத்துடுங்க என்று நெல், அரிசி விற்பது போல் பேரம் பேசுகிறார்கள். அதற்கு எங்கே போறது? ஆனால், திமுகவினர் கூட்டணி பேசிய உடனே பொட்டியை தூக்கிக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார்கள்.அப்படி என்றால் அவர்களிடமே போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால், இப்போது திமுகவிற்கு போனால் ஜெயிக்க முடியாதுங்க. இப்போ மார்க்கெட் அதிமுகவிற்கு தாங்க இருக்கிறது. அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று மக்கள் பேசிக்கொண்டிருப்பாத அந்த கட்சித் தலைவர் சொன்னார்.
சரி அப்படி என்றால் ரூபாயை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டால், இதை வைத்துத்தான் பிசினஸே நடத்தவேண்டும் என்கிறார்கள். அந்த கொடுமையில் தற்போது எடப்பாடி பழனிசாமி மாட்டிக்கொண்டு கூட்டணி பேசி குறித்து பேசி வருகிறார். நல்ல செய்தி வரும்; இந்த நாடு உருப்பட வேண்டுமானால் அதிமுக வெற்றி பெற வேண்டும்” என்றார்.