டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆண்ட்ராய்டு செயலிக்கு பதிலாக தமிழகத்தின் கோவையை சேர்ந்த அருண்காந்த் என்பவரது செயலியை டெல்லி மக்கள் பதிவிறக்கம் செய்த சுவாரசிய சம்பந்தம் நடந்துள்ளது.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின், 'தி அரவிந்த் கேஜ்ரிவால் (ஏ.கே)' செயலி அக்டோபர் 16-ம் தேதி அன்று, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கப்பட்டது. மக்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் அவர் ஆரம்பித்துள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய நினைத்த மக்கள், அதனை ப்ளே ஸ்டோரில் தேடியுள்ளனர். அப்போது ஏ.கே என தேடியதும் தமிழகத்தை சேர்ந்த இயக்குநர் அருண்காந்த்தின் செயலி திரையில் தோன்றியுள்ளது. இதுதான் கெஜ்ரிவாலின் செயலி என நினைத்த மக்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சினிமா எடுப்பது பற்றிய தொழில்நுட்பத் தகவல்களும், வழிகாட்டு முறைகளும், சாட் செய்யும் வசதியும் கொண்ட இந்த செயலியில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட வேண்டிய பல புகார்கள் அருண்காந்த்திற்கு வந்துள்ளது. மேலும் பதிவிறக்கம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருந்திருக்கிறது. அதிலும் பெரும்பான்மை பதிவிறக்கங்கள் வட இந்தியர்களால் செய்யப்பட்டிருந்தத்த்து. இதனால் சந்தேகமடைந்த அருண், செயலியை பதிவிறக்கம் செய்த ஒருவரிடம் இதனை ஏன் பதிவிறக்கம் செய்தீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர் கூறிய பின்புதான் அருணுக்கு விஷயம் புரிந்துள்ளது. விரைவில் தவறான செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.