Skip to main content

கடலூர்... காஞ்சிபுரம்..  வேலூர்...; அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கும்பல்!

Published on 20/02/2025 | Edited on 20/02/2025

 

gang that showed its hand succession  cuddalore Kanchipuram Vellore

வேலூர் அடுத்த புது வசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (40) வெளிநாட்டில் வேலை செய்யும் இவர் சகோதரர் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்த போது குடும்பத்தோடு கடந்த ஐந்தாம் தேதி பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டை நோட்டமிட்ட சிலர் பூட்டை உடைத்து சுமார் 26 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரபு சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வேலூர் டிஎஸ்பி பிரித்விராஜ் ஜவ்ஹான் தலைமையில் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அந்த வகையில் இன்று பெருமுகை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பிரபு வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மது வாங்க வந்திருப்பது தெரியவந்து அங்கு சென்ற தனிப்படை  போலீசார் சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கடேசன்(40), சென்னை கே.கே.நகரை சேர்ந்த சிலம்பரசன்(23) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கைதான இருவரும் ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும். அண்மையில் கடலூர், காஞ்சிபுரம், வேலூர் என அடுத்தடுத்த நாட்களில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 

பிரபு வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தை அடுத்து வேலூர் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களின் நகர்வை  சென்னை அனகாபுதூர் வரை கண்காணித்து சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் இவர்களை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்