‘பெண் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 2016 - 2017 காலகட்டத்தில் அம்மாநிலத்தின் மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியரின் உடலை அமைப்பை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்து சற்று முகம் சுழிக்கும் வகையில் இருந்ததாலும், அந்த நபர் தொடர்ந்து இதுபோன்று கருத்துகளைத் தெரிவித்து வந்ததாலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகாரின், அந்த நபர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தன்னை தவறாகப் பேசி வருவதாகவும், ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன், "ஒரு பெண்ணின் உடலமைப்பு 'நன்றாக இருக்கிறது' என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவை ரத்து செய்தார்.