ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை (10.01.2025) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று (08.01.2025) திருப்பதியில் குவிந்தனர். இதனால் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில் 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்தவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (09.01.2025) மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் எச்சரிகையுடன் செயல்பட வேண்டும். கோயிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாளர்கள் செயல்பட வேண்டும். கூட்ட நெரிசல் எப்படி நேரிட்டது எனத் தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதே போன்று துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்துப் பேசினார்.