நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி நுழைவுத் தேர்வுகளுக்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதியில் இருக்கும் பயிற்சி மையங்களில் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று தலைசிறந்த கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், சில மாணவர்கள் மன அழுத்ததாலும், படிக்க முடியாததாலும் தற்கொலைக்கு ஆளாகுகின்றனர்.
இந்த நிலையில், கோட்டா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் 24 மணி நேரத்திற்குள்ளே 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், குனா பகுதியைச் சேர்ந்த அபிஷேக் லோதா(20) என்ற மாணவர், கோட்டாவில் தங்கி ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். தன்னால் படிக்க முடியாததை உணர்ந்த அபிஷேக், நேற்று காலை கடிதம் எழுதிவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘என்னால் படிக்க முடியவில்லை. நான் ஜே.இ.இ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். ஆனால் அது எனக்கு வரவில்லை. மன்னிக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், அன்று மாலை நேரத்திலே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ்(19) என்ற மாணவர் தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீரஜ் என்பவரும் கோட்டாவில் தங்கி நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 24 மணி நேரத்திலேயே 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.