லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடலை அம்மாநில முதல்வர் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இந்த மோதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடலை அம்மாநில முதல்வர் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணேஷ் ராம் குஞ்சம் என்ற ராணுவ வீரர் இந்த மோதலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான கான்கேர் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக விமானம் மூலம் ராய்ப்பூர் நகருக்கு நேற்று வந்தது.
அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், வீரரின் உடலை சுமக்கத் தயாராக இருந்த ஒரு ராணுவவீரரை நகரசொல்லிவிட்டு, தானே அந்த உடலை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தும் இடத்தில் வைத்தார். பின்னர், வீரரின் உடலுக்கு முதல்வர் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் நிவாரணமாக ரூ.20 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.