வங்கக்கடலில் உருவான யாஷ் புயல், கடந்த 26ஆம் தேதி ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையைக் கடந்தது. இதனையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் ஆலோசனை கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததுள்ளனர். வந்தவுடன் புயல் தாக்கம் குறித்த பேப்பர்களை வழங்கிவிட்டு வேறு கூட்டங்கள் இருப்பதாக கூறி உடனடியாகச் சென்றுவிட்டனர் என தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் மம்தாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா, நேற்று என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், " தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளை அளித்து மத்திய அரசு நேற்று என்னை குறிவைத்தது. செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருந்தது. முழு கதையும் என்ன என்பதை கண்டுபிடிக்க வழி இல்லை. எனவே, ஒட்டுமொத்தமாக என்ன நடந்தது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடிவு செய்தேன். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட நான் திட்டமிட்டிருந்தேன். யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தைக் காண நான் சாகர் மற்றும் திகாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனது திட்டங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்டு தயாராக இருந்தது. பின்னர் திடீரென புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் வங்கத்திற்கு வர விரும்புகிறார் என அழைப்பு வந்தது. எனவே, அதற்கேற்ப நாங்கள் திட்டமிட்டோம்.
நாங்கள் 20 நிமிடங்கள் வரை காத்திருக்கும்படி செய்யப்பட்டோம். பிரதமரின் ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்கும் என்று கூறப்பட்டது. எனவே நாங்கள் பொறுமையாக காத்திருந்தோம். பிரதமர்-முதலமைச்சர் கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்தபோது, பிரதமர் அங்கு வந்துவிட்டார் என்பதையும், கூட்டம் நடந்து கொண்டிருப்பதையும் தெரிந்துகொண்டோம். வெளியே காத்திருக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் அனுமதிக்கமுடியாது என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் பொறுமையாக காத்திருந்தோம். பின்னர் மீண்டும் கேட்டபோது, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு யாரும் உள்ளே நுழைய முடியாது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டம் ஒரு வேறு இடத்திற்கு மாறிவிட்டது என்று யாரோ எங்களிடம் சொன்னார்கள், எனவே தலைமைச் செயலாளரும் நானும் அங்கு செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது, பிரதமர், ஆளுநர் மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் சில எம்.எல்.ஏக்களுடன் ஆகியோருடன் ஆலோசனையில் இருப்பதைக் கண்டோம். இது எங்களுக்கு கூறப்பட்டதற்கு எதிராக இருந்தது. இது ஒரு பிரதமர்-முதல்வர் கூட்டமாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். எனவே நாங்கள் எங்கள் அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்தோம். பின்னர் பிரதமரின் அனுமதியுடன் நாங்கள் திகா சென்றோம். நான் மூன்று முறை பிரதமரின் அதற்காக பிரதமரிடம் அனுமதி கோரினேன்.
சில காலியிடங்கள் இருந்தன, ஆனால் நாங்கள் திகாவுக்குப் புறப்பட்டதால் உட்கார வேண்டிய அவசியமிருக்கவில்லை. பின்னர் காலியாக உள்ள இருக்கைகளின் புகைப்படம் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டதை கண்டோம். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு என்னை இப்படி குறிவைக்கிறது. குஜராத், ஒடிசா, பிற மாநிலங்களில் பிரதமர் ஆலோசனை நடத்தியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்காளத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு முறையும் நீங்கள் இங்கு வரும்போது, எங்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்க ஏதாவது செய்கிறீர்கள்.
எங்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? எங்களை ஏன் குறிவைக்கிறீர்கள்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? மேற்குவங்க தேர்தலில் நீங்கள் தோல்வியடைந்தீர்கள் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாததாலா? வங்கத்திற்கு உதவுவதற்கு ஈடாக அவரது கால்களைத் தொடுமாறு பிரதமர் என்னிடம் சொன்னால், வங்க மக்களுக்காகவும் வங்காளத்தின் முன்னேற்றத்துக்காகவும் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தயவுசெய்து இந்த மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம். வங்கத்தை இப்படி தண்டிக்க வேண்டாம். கடுமையாக உழைக்கும் தலைமைச் செயலாளரை அவமானப்படுத்தவும் வேண்டாம்.
தலைமைச் செயலாளரை திரும்ப அழைக்கும் இந்த கடிதத்தை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏன் அவரை குறிவைக்கிறீர்கள்? இதைச் செய்வதன் மூலம் நீங்கள் நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலுமுள்ள அனைத்து தலைமைச் செயலாளர்களையும் அவமதிக்கிறீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் பணியில் இருப்பவர்களுக்கு லாபி இல்லை என்று நினைக்கிறீர்களா? அவர்களை அவமதிக்கவோ சவால் விடவோ வேண்டாம். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்" என்றார்.