
சென்னையில் உள்ள அரசு தரமணி மகளிர் பாலிடெக் கல்லூரியில் படிக்கின்ற 16 வயது மாணவி கடந்த வாரம் சிலரால் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர் மாணவியை அழைத்து சென்று போதைப்பொருட்களை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை; குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைளை முன்வைத்து இன்று காலை முதல் எஸ்.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்து மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகத்தில் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாருக்கு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சட்டையைப் பிடித்து உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை மாணவர்கள் சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.