
சென்னையில் இன்று காலை 8 இடங்களில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 8 பகுதிகளில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் எல்லைக்கு உட்பட்ட ஆறு இடங்களில் செயின் பறிப்புகள் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
சைதாப்பேட்டை மீன்வளத்துறை அருகே இந்திரா என்ற பெண்ணிடம் நான்கு சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சாப்பாடு கடை வைத்திருக்கும் இந்திரா இன்று காலை ஆறு மணி அளவில் கடைக்கு சென்று கடையருகே கிடந்த குப்பைகளை கூட்டியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவருடைய கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். இதேபோல் சென்னையில் பல இடங்களில் எட்டுக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இன்று ஒரே நாளில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறி தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஹைதராபாத் செல்லும் விமானத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த பொங்கலன்று தாம்பரம் பகுதியில் இதேபோல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றனர். கடந்த முறை தப்பிய நிலையில் இந்த முறை சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.