Skip to main content

“8 மீட்டர் பயணித்த சந்திரயான் - 3 ரோவர்” - இஸ்ரோ

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Chandrayaan - 3 rover that traveled 8 meters ISRO

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

நேற்று முன்தினம் மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், லேண்டரில் இருக்கும் ரோவர் எப்போது வெளியே வந்து அதன் ஆய்வினைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் உலக நாடுகளில் உள்ள பல விண்வெளி ஆய்வு மையங்கள் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த நிலையில்  நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கியுள்ளது. இதனை, ‘நிலவின் மேற்பரப்பில் ஆய்வைத் தொடங்கியது இந்தியா’ என இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் உள்ளிட்ட மூன்று கருவிகளின் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவு அதிர்வை அளவிடும் கருவி, நிலவின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்யும் கருவி, வெப்ப இயற்பியல் பரிசோதனைக் கருவி எனும் மூன்று கருவிகள் செயல்பாடும்  தற்போது தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளது. ரோவரின் முக்கிய பகுதிகளான எல்ஐபிஎஸ் (LIBS), எபிஎக்ஸ்எஸ் (APXS) ஆகியவை செயல்படத் தொடங்கியுள்ளன. லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவை திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்