கனரா வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிகளில் ரூ. 350 கோடிக்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் 'பஞ்சாப் பாஸ்மதி ரைஸ்' லிமிடெட் நிறுவன இயக்குநரான மஞ்ஜித் சிங் மக்னி.
பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மஞ்சித் சிங் மக்னி, அவரது மகன் குல்விந்தர் சிங் மக்னி, அவரது மருமகள் ஜஸ்மீத் கவுர் மற்றும் சில அரசு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து ஆறு வங்கிகளிலும் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கனரா வங்கியின் ரூ .517 கோடி, ஆந்திர வங்கியின் ரூ .53 கோடி, யுபிஐ -யில் ரூ .44 கோடி, ஓ.பி.சி.-யில் ரூ .25 கோடி, ஐ.டி.பி.ஐ. -யில் ரூ .14 கோடி மற்றும் யூகோ வங்கியில் ரூ .41 கோடி என்கிற அளவில் இவர்கள் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி குறித்து 2019 மார்ச் 11 அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டபோது, 2019 மார்ச் 30க்குள் சி.பி.ஐ.-க்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ.-இல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய , வங்கி 15 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடன்பெற்று மோசடி செய்த மஞ்ஜித் சிங் மக்னி 2018 ஆம் ஆண்டே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும். இப்போது அவர் கனடாவில் வசிக்கலாம் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.