கடந்த அக்டோபர் மாதம் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் சங்கத்துடன் எண்ணெய் நிறுவனங்கள் போட்ட ஒப்பந்தப்படி, அந்தந்த மாநில லாரிகளுக்கே அந்தந்த மாநிலத்தில் எரிவாயு விநியோகிக்க முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தென் இந்தியா முழுவதும் இயங்கிவந்த தமிழக லாரிகள் தமிழகத்துக்குள்ளேயே இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் சுமார் 700 க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலை இல்லாமல் நின்றது. எனவே இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்காத நிலையில் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சங்கத்தில் சுமார் 5,500 லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அறிவித்தபடி இன்று காலை 6 மணி முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.