பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்சி என்ற பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக காக்கிநாடா நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநர் எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாலையோரம் திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த சாகர் கால்வாயின் 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 7 பேர் திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, காளஹஸ்தியில் உள்ள மிட்டகந்திரிகா என்ற இடத்தில், எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.