ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம் ஆகும். அந்த திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டு 18 ஆயிரத்து 626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12ஆம் தேதி (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மசோதாவின் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பை பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளதால் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்த இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.