கரோனா வைரஸ் தாக்கத்தால் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி கடந்த ஒன்றரை வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த நிதியை மத்திய அரசின் கஜானாவுக்குத் திருப்பப்பட்டு, கரோனா நோய் பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தேசிய அளவில் குறைந்துள்ளது. பரவலின் வேகத்தையும் கட்டுப்படுத்தியுள்ளனர். கரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவருகிறது.
இந்தச் சூழலில், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டுசென்றனர். நாடாளுமன்ற சபாநாயகரிடம் இதுகுறித்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும், இந்தக் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தாமலே இருந்தது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பாஜக எம்.பி.க்களும் கடந்த சில வாரங்களாகவே அழுத்தம் கொடுத்துவந்தனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தை நேற்று (10.11.2021) கூட்டியிருந்தார் பிரதமர் மோடி. அந்தக் கூட்டத்தில், எம்.பி.க்கள் தொகுதி நிதி குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிறுத்திவைத்துள்ள முடிவை ரத்து செய்து மீண்டும் நிதியை விடுவிக்க ஒப்புதல் பெறப்பட்டது. எம்.பி.க்கள் தொகுதி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்திருந்தாலும் இந்த ஆண்டுக்கான நிதியாக 2 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்க முடியும். அடுத்த ஆண்டுதான் முழுமையான நிதியாக 5 கோடி வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.