இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. நெட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் எனத் தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரு தேர்வுகளையும் நடத்தி வருவது தேசிய தேர்வு முகமை ஆகும்.
இந்நிலையில் வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. தேர்வு செயல்முறையின் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளில் முன்னேற்றம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை இந்த குழு 2 மாதங்களுக்குள் கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.