மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனு கல்யாணே (35). இவர் இந்தூர் பகுதி பா.ஜ.க இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், சிமன்பாக் சதுக்கம் பகுதியில் பா.ஜ.க சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டுவதற்காக மோனு கல்யாணே நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மோண்டு கல்யாணேவை சரமாரியாக சுட்டு தள்ளினர். இதில், மோனு கல்யாணே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். மோனு கல்யாணேவை சுட்ட நபர்களைப் பிடிக்க அவரது நண்பர்கள் முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, படுகாயமடைந்த மோனு கல்யாணேவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோனு கல்யாணேவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அர்ஜுன் பத்ரோட் மற்றும் பியூஷ் பத்ரோட் ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும், இதனால் அவர்கள் இருவரும் மோனு கல்யாணேவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாகவும் தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, மோனு கல்யாணேவின் ஆதரவாளர்கள், கொலையாளிகளில் ஒருவரின் வீட்டை அடித்து நொருக்கியும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் தீ வைத்து எரித்ததால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க இளைஞரணி தலைவரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.