உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சிறுவர் காப்பகம் ஒன்றில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அங்கிருக்கும் ஐந்து சிறுமிகள் கருவுற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரின் ஸ்வரூப் நகரில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அந்தக் காப்பகத்தில் உள்ள 57 சிறுமிகளுக்குக் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு, அந்தக் காப்பகத்தில் உள்ள ஐந்து சிறுமிகள் கருவுற்றிருப்பதும், ஒரு சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள கான்பூர் கமிஷனர் சுதிர் மகாதேவ், "பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த விடுதிக்கு அழைத்து வரும் முன்னரே இந்தச் சிறுமிகள் கர்ப்பமாக இருந்துள்ளனர். இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார். பெண்குழந்தைகள் பாதுகாப்பு, காப்பகங்களில் குழந்தை நலம் குறித்த நோக்கம் உள்ளிட்ட பலவற்றை கேள்விக்குள்ளாகியுள்ள இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.