மத்தியப்பிரதேசத்தில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, மார்ச் 16-ந் தேதி சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்தச் சூழலில் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அவை 26 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.