சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக நிர்வாகி ரமேஷ் குல்ஹானே. இவர் அப்பகுதியிலேயே மாவு ஆலை நடத்தி வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு பெதுல் நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரமேஷ் குல்ஹானே அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அவரது காரை எரித்தனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அந்த ஊரை விட்டு ஓடிவிட்டார்.
காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று பெதுல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காவல் அதிகாரி கூறுகையில், “கைதான ரமேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.