தெலங்கானா மாநிலத்தில் நெல் கொள்முதல் தொடர்பாக தெலங்கானா அரசுக்கும் பாஜகவிற்கும் கடும் மோதல் வெடித்துள்ளது. தெலங்கானா 55.75 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விளைவித்துள்ள நிலையில், 32.66 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன்வரை மட்டுமே அரிசி கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இதனைத்தவிர தெலங்கானா அரசு, விவசாயிகளிடமிருந்து 5 லட்சம் மெட்ரிக் டன் புழுங்கல் அரிசியையும் கொள்முதல் செய்துள்ளது. இந்த புழுங்கல் அரிசியை வாங்கிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை நேரடியாகச் சந்தித்துக் கேட்டுக்கொண்டதாகவும், இதுவரை இதுகுறித்து பதில் வரவில்லை எனவும் அண்மையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நெல் கொள்முதல் குறித்து மத்திய அரசு தனது கொள்கையை அறிவிக்க வேண்டுமெனக் கூறி முதல்வர் சந்திரசேகர ராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு சேர்ந்து அவரது கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தின்போது பேசிய சந்திரசேகர ராவ், மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். போராட்டத்தின் போது சந்திரசேகர ராவ் பேசியதாவது; பாஜக, தேர்தல் நேரத்தில் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்குவதில் மட்டுமே மும்முரமாக உள்ளது. உங்கள் உளவுத்துறையினர் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். , எதிர்காலத்தில் தெலங்கானாவும் பழிக்குப் பழி என்ற அணுகுமுறையைக் கையிலெடுக்கும். நீங்கள் பேசினால் நாங்களும் வழக்கு போடுவோம்.
தேர்தல் வரும்போது அவர்கள் இந்து-முஸ்லீம் பிரச்சினை, பாகிஸ்தான் உணர்வு ஆகியவற்றைக் கொண்டு வருகிறார்கள். தேர்தலின்போது வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குகிறார்கள். எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என நாடகம் நடத்துகிறீர்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நெல் பயிரிடுங்கள் என்று பாஜக கூறுகிறது, ஆனால் மத்திய அரசு நெல்லை வாங்கவில்லை. அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். நீங்கள் வாங்காவிட்டால், பாஜக அலுவலகத்தில் வந்து நெல்லை கொட்டுவோம். மாநிலத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான இலக்கை நிர்ணயிக்குமாறு உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் 50-நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளேன்.
50 நாட்களாக நமது கோரிக்கையை அவர்கள் புறக்கணித்தனர். கடந்த காலத்தில் தெலங்கானாவிற்கான போராட்டத்தின் போது நாம் பதவிகளைத் தூக்கி எறிந்தோம். இதில் நாம் தலைமை வகிப்போம். மத்திய அரசின் கொள்கைகளால் விவசாய சமூகம் பாதிக்கப்படலாம் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினோம்... உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். விவசாயிகளைக் காப்பாற்ற வாருங்கள். எதேச்சதிகார விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள், விவசாய பம்ப் செட்டுகளில் மீட்டர் பொருத்தும் கொள்கையை மாற்றுங்கள் என்கிறோம். இந்த போராட்டம் இன்றுடன் முடிவடையப்போவதில்லை.
இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.