இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து இன்று வரை எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 24 ஆம் தேதி அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால், சஞ்சய் சிங் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கியிருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அதில் பகலில் காந்தி சிலை அருகிலும், இரவில் நாடாளுமன்றக் கட்டட நுழைவு வளாகத்தின் முன்பும் அவரது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினமும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, அவருடன் இருந்து அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ப. சிதம்பரம் எம்.பி, உள்ளிட்டோர் காந்தி சிலை அருகே போராட்ட இடத்திற்குச் சென்று சஞ்சய் சிங்கை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “இரவில் போராட்டம் தேவை இல்லை. பகலில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தை தொடங்கி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடியும் போது முடித்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதில், எதிர்க்கட்சிகள் ஏற்கனவே முடிவு செய்தபடி நேற்று பல எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர்.