மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (17-07-24) தாதர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி கவுதம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த நிமா மோஹர்கர் என்ற பெண், எம்.பி கவுதமை அறைந்தார். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தியதில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பண்டாரா-கோண்டியா தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு கிடைக்காததால் பிஎஸ்பி தொண்டரான நிமா மோஹர்கர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், எம்.பி கவுதமை தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதால், மொஹர்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் டோங்ரே கூறுகையில், ‘கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொஹர்கர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் அவர் வலுவான வேட்பாளராக இருப்பார் என்பதில் கட்சிக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்க முடியாது. அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், மேலும் அவர் மீது தாதர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.