அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் நிலையில், ட்ரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் வீடியோ மீம் ஒன்றை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். ட்ரம்ப் அகமதாபாத் பயணம் செய்ய உள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரம்ப் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிகளில் 400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் 400 அமெரிக்க அதிகாரிகள் அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.100 கோடி செலவிடப்படுவதாக குஜராத்அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ட்ரம்ப்பை பாகுபலி போல சித்தரிக்கும் மீம் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப், இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். காளகேயர்கள் உடனான போரின்போது பிரபாஸ் சண்டையிடும் காட்சிகளை எடுத்து, அதில் பிரபாஸின் முகத்திற்கு பதிலாக ட்ரம்ப் முகம் மார்ஃப் செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.