
இந்தியாவும், சீனாவும் கால்வான் எல்லையில் படைகளைக் குவித்து வரும் பதற்றமான நிலையில், அதன் தாக்கம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் (ஜூன் 17) இந்தியப் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் துவக்கம் முதல் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் சீரற்று காணப்பட்டது. எனினும், சென்செக்ஸில் 88 பங்குகள் 52 வார உச்ச நிலையைத் தொட்டு வர்த்தகமானதால், முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிப்டியில் முதல்நாள் சந்தை 9,914 புள்ளிகளுடன் முடிந்திருந்த நிலையில், புதன்கிழமை இண்டெக்ஸ் முந்தைய நாளைக் காட்டிலும் 38 புள்ளிகள் குறைந்து, 9,876.70 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. போர்ப் பதற்றம் ஒருபுறம் இருப்பினும், மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகள் வெளியானதால், முதலீட்டாளர்களிடம் ஆர்வம் ஸ்திரமாக இருந்தது. ஒருகட்டத்தில், நிப்டி 10,003.60 புள்ளிகள் வரை அதிகபட்சமாக உயர்ந்தது. குறைந்தபட்சமாக 9,833.80 புள்ளிகள் வரை லேசான சரிவைக் கண்டது. இறுதியில் 9,881.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இது, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 32.85 புள்ளிகள் மட்டுமே சரிவு ஆகும்.
ஏறிய பங்குகள்:
தேசிய பங்குச்சந்தையில் நேற்று (17/06/2020) வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,916 பங்குகளில் 1,012 பங்குகள் ஏற்றம் கண்டன. 835 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தக நடவடிக்கைகளைக் கணக்கிட உதவும் 50 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் சரிவிலும் இருந்தன.

நிப்டியில், அதிகபட்சமாக மாருதி பங்குகள் 4.05 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. அதற்கு அடுத்து, பார்தி ஏர்டெல் (3.41%), விப்ரோ (2.45%), பிரிட்டானியா (1.98%), ஆக்சிஸ் வங்கி (1.85%) ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் கொடுத்தன. அதேநேரம், இன்ப்ராடெல் (4.49%), கோடக் வங்கி (2.28%), ஐடிசி (2.19%), பவர் கிரிட் (2.15%), மஹிந்திரா அண்டு மஹிந்திரா (1.85%) பங்குகள் எதிர்மறை வளர்ச்சியில் இருந்தன.
சரிவில் சென்செக்ஸ்:
சென்செக்ஸ் முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில், புதன்கிழமை காலையில் 177 புள்ளிகள் குறைந்து, 33,438.31 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. 10.30 மணி முதல் 12.10 மணி வரை 33,660 புள்ளிகளுடன் பெரிய அளவில் மாற்றமின்றி வர்த்தகம் லேசாக ஸ்தம்பித்தது. அதன் பின்னரும் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்த சென்செக்ஸ், நேற்றைய வர்த்தக நேர இறுதியில் 33,507.92 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதிகபட்சமாக 33,933 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 33,332 புள்ளிகளுக்கும் சென்றது.
சென்செக்ஸில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆகின. அதேநேரம், பி.எஸ்.இ .சந்தையில் பதிவு செய்துள்ள 2,720 நிறுவனங்களில் 1,410 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளித்தன. 1,154 பங்குகளின் விலைகள் லேசாகச் சரிந்தன. 156 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.

அதேநேரம், 88 பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது, முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 48 பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையை பதிவு செய்தது.
சென்செக்ஸில் ஜி.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 19.99 சதவீதம் ஆதாயம் அளித்தன. ஓரியண்ட் சிமெண்ட் 13.90 சதவீதம், கோரமண்டல் 6.62 சதவீதம், பிர்லா கார்ப்பரேஷன் 9.99 சதவீதம், சோழா பைனான்ஸ் 8.30 சதவீதம் மற்றும் ஐடிஐ பங்குகள் 10.65 சதவீதம் வரை லாபம் அளித்தன.
விலையேறும் என எதிர்பார்க்கப்பட்ட வக்ராஞ்சி பங்குகள் 4.91 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மஹாராஷ்டிரா வங்கி, சுஸ்லான், கேபிஆர் மில், ஆயில் ஆகிய பங்குகளின் மதிப்பும் 4.50 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

உலகச்சந்தைகள் நிலவரம்:

லண்டன் பங்குச்சந்தையான எப்.டி.எஸ்.இ. 0.75 சதவீதம், பிரான்ஸ் நாட்டின் சிஏசி 1.42 சதவீதம், ஜெர்மனியின் டி.ஏ.எக்ஸ். 0.83 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தன. ஆசியாவின் நிக்கி சந்தையைத் தவிர, மற்ற சந்தைகள் ஏற்றம் கண்டிருந்ததால், இந்தியாவில் பதற்றமான சூழ்நிலையிலும் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகளில் அபாயகரமான வீழ்ச்சி ஏதும் ஏற்படவில்லை.