இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்புகளும் இதனால் ஏற்பட்டன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கான பல்வேறு பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், கரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி அளவிலான கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல, சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். புதிய திட்டமான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 25 லட்சம் பேர் வரை பயனடைவார்கள் என்ற நிதியமைச்சர், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் இந்த கடன் சிறிய அளவிலான கடன் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் விதமாக, சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கியதும், இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2022 வரையோ அல்லது முதல் 5 லட்சம் விசாக்களை விநியோகிக்கப்படும் வரையோ இந்த திட்டம் அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட 10,700 பிராந்திய அளவிலான சுற்றுலா வழிகாட்டிகள், பயண மற்றும் சுற்றுலா பங்குதாரர்களுக்கு புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்திற்காக மேலும் 23,220 கோடி அளிக்கப்படும் எனவும், குழந்தைகள் பராமரிப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.