இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தன்னுடைய இலக்காக நிர்ணயித்த 400 தொகுதிகளை எட்ட முடியாதது ஏன் என்பது தொடர்பாக பாஜக தலைமை ஆலோசிக்க முடிவெடுத்திருந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் இல்லத்தில் இது தொடர்பான ஆலோசனை தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பிட்ட இலக்கான 400-ஐ எட்ட முடியாதது ஏன்? சரிவுக்கு காரணம் என்ன? பாஜகவின் மிகவும் பலம் வாய்ந்த தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த முறையைவிட பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். இதற்கான காரணங்கள் என்ன? மகாராஷ்டிராவிலும் கடந்த முறை வந்த எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் வெற்றி கிடைத்திருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.