![Athir Ranjan Chowdhury says All should work without arrogance](http://image.nakkheeran.in/cdn/farfuture/oeZmXnP-kPRB6wML0LJYNpdz4_SnGLNvLB2aJLX0qbk/1695119994/sites/default/files/inline-images/athir-ni.jpg)
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறுகிறது.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, “ஆணவத்தை விடுத்து நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட சான்றோர்கள், இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கருத்து சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை உறுதிப்படுத்தினர். ஆனால், தற்போதைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் உரை மக்களவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. நாட்டில் ‘ஒரு கட்சி சர்வாதிகாரம்’ திணிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் தோன்றுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்கள் கையொப்பமானது. அந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருந்திருந்தால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நட்பு இல்லாமல் இருந்திருக்கும். அதனால், மன்மோகன் சிங் குறைவாகப் பேசினாலும் அதிகம் பணியாற்றினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நாட்டில் கொண்டு வர காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தான் காரணமாக இருந்துள்ளார். இப்படி நேரு முதல் மன்மோகன் சிங் வரை நாட்டின் வளர்ச்சிக்காகப் பல காங்கிரஸ் பிரதமர்கள் அரும்பாடுபட்டனர்” என்று பேசினார்.