தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் 30 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள், மது போன்ற பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் பறக்கும் படை காவல்துறையினர் நேற்று (23-11-23) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அப்போது அதில், ரூ.5 கோடி இருந்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பணம் ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.