ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்சில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதித்தது. நீரஜ் சோப்ரா தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்றார். பி.வி சிந்து, தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். லோவ்லினா ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது.
அதேபோல் மீராபாய் சானு பளு தூக்குதலில் வெள்ளி பதக்கத்தினையும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். இன்னொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றது.
ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய மல்யுத்த விளையாட்டிற்கு கைகொடுக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு முன்வந்துள்ளது. 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை, மல்யுத்த விளையாட்டு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஆதரிக்கவும் 170 கோடியை செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளதாவது; ஒடிசா சிறிய மாநிலமாக இருந்தாலும், அவர்கள் ஹாக்கியை பெரிய அளவில் ஆதரிக்கிறார்கள், எனவே பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஏன் மல்யுத்தத்தை ஆதரிக்க முடியாது என யோசித்தோம். இதுதொடர்பாக நாங்கள் அவர்களை அணுகினோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் அதை ஏற்றுக்கொண்டார்.
2024 ஒலிம்பிக் வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ. 10 கோடி (மொத்தம் 30 கோடி) கேட்டுள்ளோம். 2024-2028 வரை, நாங்கள் ஆண்டுக்கு ரூ .15 கோடி (மொத்தம் ரூ. 60 கோடி) கேட்டுள்ளோம். 2028-2032 வரை ஆண்டுக்கு 20 கோடி (மொத்தம் 80 கோடி) கேட்டுள்ளோம். இது நடந்தால் நாட்டின் முன்னணி வீரர்களுக்கு மட்டும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்காது. இளம் வீரர்களுக்கும் கிடைக்கும். எங்களால் தேசிய அளவில் வென்றவர்களுக்கு கூட பரிசுத்தொகை அளிக்க முடியும். இளம் வீரர்களின் பயிற்சிக்கும் அதிகம் செலவு செய்ய முடியும். அவர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்ப முடியும்.
இவ்வாறு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.