மத்திய அரசு நாடுமுழுவதும் ஒரே வரியென்று ஜி.எஸ்.டியை அறிவித்தது. அதேபோல் தற்போது நாம் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை உபயோகித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. முதலில் இந்த திட்டத்தை ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சோதனை திட்டமாக செயல்படப்போகிறது. இந்த திட்டத்தை முதன்முதலில் தெலுங்கானா அரசுதான் மாநிலங்களுக்குள்ளே ரேஷன் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என முதன்முதலில் அறிமுகம் செய்தது.
அதன் பின் இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்தத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர தற்போது நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநில மக்களும் பாகுபாடின்றி ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு முக்கியமான விஷயம் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்தவர்கள் மட்டும்தான் பொருட்களை பெறமுடியும். இந்த திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்கு செல்லும் ஏழைமக்கள் இதன் மூலம் மிகுந்த பயனடைவர் என்று மத்தியரசு தெரிவித்துள்ளது.